ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

’60 மாதங்களில் புதிய நாடொன்றை அமைக்கும் 5 வருடத் திட்டம்’ என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

கொழும்பு விஹாரமாதேவி திறந்த வெளியரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இம்முறை தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

பொருளாதாரத்தை மேம்படுத்துதல், ஊழலை வேரோடு இல்லாதொழித்தல், சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல், அடிப்படை வசதிகளுக்கான முதலீடு மற்றும் கல்வியை மேம்படுத்துதல் என்பன ஐக்கிய தேசியக் கட்சியின் 5 வருடத் திட்டமாகும்.

01. பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை

இடதுசாரி மற்றும் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு அப்பால் மக்களுக்கு பயனுள்ள பொருளாதாரத் திட்டத்தின் ஊடாக, அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய சமூக வர்த்தக சந்தைப் பொருளாதாரம் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துதல், பல்வேறு அபிவிருத்தி வலயங்களை நிறுவுதல், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நிர்வகிக்கும் கிராமத்திற்குப் பதிலாக, கிராமவாசிகளால் நிர்வகிக்கும் கிராமமொன்றை நிறுவுவது நோக்கமாகவுள்ளது.



02. ஊழலை வேரோடு இல்லாதொழித்தல்

ஊழலை வேரோடு அழிப்பதற்கான விரிவான திட்டமொன்றை பிரேரித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசாங்கத்தின் கீழ், புதிய பொலிஸ் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சட்டமொன்றின் ஊடாக நிதி மோசடி விசாரணைப் பிரிவை சட்டமயமாக்குதல் மற்றும் பொலிஸ் சட்டங்கள் தொடர்பில் பல்கலைக்கழகமொன்றை ஸ்தாபித்தல் என்பன நோக்கமாகவுள்ளது.

03. சுதந்திரத்தை உறுதி செய்தல்

புதிய அரசியலமைப்பொன்றை அமைப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் 5 வருட திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாகும்.

இணைந்த அரசாங்கத்தின் கீழ் அனைவரினதும் ஒன்றிணைவுடன் அதிகாரத்தை அதிகபட்சமாகப் பகிர்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

04. அடிப்படை வசதிகளுக்கான முதலீடு

தெற்காசியாவின் மெகா பொலிஸ் நகரமாக மேல் மாகாணத்தை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அனைவருக்கும் நிரந்தர வீடு என்ற திட்டத்தின் கீழ் 5 இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

05. கல்வியை மேம்படுத்துதல்

குணம், திறமை, மனிதாபிமானம், புதிதாக சிந்திக்கும் பிள்ளையொன்றை உருவாக்கும் எதிர்பார்ப்புடன்,
சாதாரண தர பெறுபேறுகள் எதுவாக அமைந்தாலும், அனைத்து பிள்ளைகளுக்கும் உயர்தரத்திற்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக 5 வருடத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பாடசாலை கல்வி சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, ஆசிரியர்களை வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை முற்றாக நிறுத்துவதாகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளது.

தேசிய உற்பத்தியில் கல்விக்கு ஒதுக்கும் நிதியை 6 வீத இலக்கு வரை கொண்டு செல்வதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பது 5 வருட திட்டத்தின் நோக்கமாகவுள்ளது.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin