ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் தப்பியோட்டம் ; பல மாடுகள் பலியான சோகம்

ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து அக்குரணை வரை மாடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று நாவுல – கொஹோன்வல இராணுவ முகாமிற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கு பின்னர் அந்த இடத்திற்கு பலர் விரைந்துள்ள நிலையில், பாரவூர்தியினுள் 11 மாடுகள் உயிரிழந்து காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பாரவூர்தியில் 38 மாடுகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விடிந்த பின்னர் பாரவூர்தியில் பயணித்த எவரும் அந்த இடத்தில் இல்லாத நிலையில், பாரவூர்தியை வீதியில் இருந்து அகற்றுவதற்கு காவல்துறைக்கு அறிவித்த போதும் காவல்துறையினர் உரிய நேரத்திற்கு வரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

20 மாடுகளை ஏற்றிச் செல்லவே அந்த பாரவூர்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாரவூர்தியில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin