மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஐந்தாண்டு திட்டம் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் (EU- SDDP) நடைமுறைப்படுத்தப்படும் ஐந்து ஆண்டு அபிவிருத்தித்திட்டத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் ((UNDP)) மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.ஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.



நேற்றைய மீளாய்வுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் இணைப்பாளர் வருண தர்மரெட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச உத்தியோகத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி சம்பந்தமாக ஏற்கனவே புவிசார் தகவல் தொழில்நுட்பம், விளைவுசார் இலக்கு நோக்கிய திட்டமிடல் முகாமைத்துவம் உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதே நேரம், கணணி, மொழி விருத்திக்காக ஆங்கில, சிங்களப் பயிற்சிகள், பொது மக்கள் பட்டயம் உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.

 ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிப்படைக்கட்டுமான வேலைகள், சமூக மட்ட குழுக்களை வளப்படுத்துதல், இளைஞர் தலைமைத்துவ வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், பிரதேச செயலகங்களையும் மாவட்ட செயலகத்தினையும் இலத்திரனியல் ரீதியாக இணைத்தல் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களது வாழ்வாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்ட மாற்று வருமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்றைய கூட்டத்தில்  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களின் தற்போதைய நிலைகள், ஏற்கனவே தொடங்கப்படாத திட்டங்களின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

இதே நேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2016 முதல் 2020 வரையான மாவட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கான ஆலோசனை முன் வைப்புக்களை  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆலோசகர் கலாநிதி ரி.ஜெயசிங்கம் கருத்துக்களை முன் வைத்தார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் செயற் திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை உத்தியோகத்தர்களான கே.பார்த்தீபன், கே.சுபாஸ்கரன் ஆகியோர் வழங்கினர்.

அத்துடன், பிரதேச செயலாளர்கள், , உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலகங்களின், மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.            

அதே நேரம்,   பிரதேச செயலகங்களையும் மாவட்ட செயலகத்தினையும் இலத்திரனியல் ரீதியாக இணைக்கும் திட்டத்திற்காகா பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.





Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin