புலிகளை விடவும், இஸ்லாமிய தீவிரவாதம் ஆபத்தானது - பொதுபலசேனா

தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும், இஸ்லாமிய தீவிரவாதம் ஆபத்தானது. இந்நிலையில், இஸ்லாமிய தீவிரவாதத்தினூடாக சமூகப் பிரிவினை மற்றும் அடிப்படைவாதத்தைத் தூண்டும் சகல அமைப்புக்களையும் தடை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுஜன முன்னணியின் தலைவரும், பொதுபலசேனாவின் நிறைவேற்று அதிகாரியுமான திலந்த விதானகே இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதத்தை வெல்வது, புலிகளை வென்றதை விடவும் கடினமான செயலாயினும், அப்படி அதனை வெல்லும் பட்சத்திலேயே மக்களுக்கும், நாட்டுக்கும் வரலாற்று ரீதியிலான வெற்றியொன்று கிடைத்ததாக அர்த்தப்படும் எனவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் நாட்டுக்கு பெரும் தீங்கு என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு, அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும்.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு அதிகாரம் பொருந்தியதோர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை வளர்ப்பது, அதற்கு உதவி, ஒத்தாசை புரிவது கடும் தண்டனைக்குரிய குற்றம் என்கிற அடிப்படையில் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.



சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறும் இஸ்லாமிய அமைப்புக்களின் வலையமைப்பை தொடர்ந்தும் பரிசீலிக்க வேண்டும்.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை தூண்டும் மற்றும் அதற்கு துணைபோகும் விதமாக, முழுதாக முகம் மறைத்து அணியும் ஆடைகளோடு முஸ்லிம்கள் பொதுயிடங்களுக்கு வருவதனை பகிரங்கமாகவே தடை செய்ய வேண்டும்.

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு வலுச்சேர்க்கும் இஸ்லாமிய வலயங்கள் மற்றும் குடியேற்றங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

மார்க்கப் பணிகள் நிமித்தம் மற்றும் சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு இஸ்லாமிய அறிஞர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

சரீஆ சட்டத்தை அமுல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும்.

ஹலால் சான்றிதழ்களில் பெறப்படும் வருமானம் மேற்படி இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பில் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதால், அது குறித்து ஆராய்ந்து, ஹலால் சான்றிதழை உடனடியாக தடை செய்ய வேண்டும் .

– இவ்வாறு 25 காரணங்களை மேற்கோள் காட்டியும், ஜனாதிபதியை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுமே இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (டெய்லிசிலோன்)
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin